சென்னையில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்- 3,690 பணியாளர்கள் வீடு வீடாக ஆய்வு
சென்னை, 20 செப்டம்பர் (ஹி.ச.) சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விக்டோரியா மாணவர் விடுதியில் சென்னை மாநகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சென்னையில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட
டெங்கு


சென்னை, 20 செப்டம்பர் (ஹி.ச.)

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விக்டோரியா மாணவர் விடுதியில் சென்னை மாநகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

சென்னையில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கடந்த இரண்டு மாதங்களாக காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், கடந்த மாதம் 4,400 ஆக இருந்த காய்ச்சல் பாதிப்பு, இந்த மாதம் 4,000 ஆக குறைந்துள்ளதாகவும் கூறினார்.

டெங்கு பாதித்தவர்களில் 95 சதவீதம் பேர் வீடுகளிலேயே சிகிச்சை பெற்று குணமடைந்து வருவதாகவும், 5 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மாநகராட்சி சார்பில் 3,690 மலேரியா மற்றும் டெங்கு தடுப்புப் பணியாளர்கள் களத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஒரு பணியாளர் நாளொன்றுக்கு 80 முதல் 100 வீடுகள் வரை ஆய்வு செய்து, வாரத்திற்கு சுமார் 500 வீடுகளை கண்காணித்து வருகின்றனர்.

ஒரே நாளில் கொசுப்புழு உற்பத்திக்கு ஏதுவாக இருந்த 680 கிலோ பழைய டயர்கள் மற்றும் கொள்கலன்கள் அகற்றப்பட்டுள்ளன.

கடந்த 20 நாட்களில் கொசுப்புழு உற்பத்தியைத் தடுக்கத் தவறிய வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு ரூ.5.56 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையர் தெரிவித்தார்.

வடகிழக்குப் பருவமழைக்கு முந்தைய மழையால் நன்னீர் தேங்கி கொசுப்புழுக்கள் உருவாக வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் வாரத்திற்கு ஒருமுறையாவது வீடு மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

கல்வி நிறுவனங்களும் தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் ஒத்துழைப்புடன் வளாகங்களைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும், நகர் முழுவதும் தினசரி 100 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு ஸ்க்ரப் டைபஸ் எனப்படும் பாக்டீரியா தொற்று மற்றும் அதன் காரணமாக ஏற்பட்ட பல உறுப்பு செயலிழப்பால் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Hindusthan Samachar / GOKILA arumugam