Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 20 செப்டம்பர் (ஹி.ச.)
வார விடுமுறையை முன்னிட்டு நாட்டின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால், கடற்கரை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு வருகை தந்துள்ளனர்.
குறிப்பாக, விவேகானந்தர் பாறை நினைவு மண்டபம், 133 அடி திருவள்ளுவர் சிலை, காந்தி மண்டபம், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் மற்றும் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களில் காலை முதலே பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்டு ரசித்தனர்.
விடுமுறை கூட்டம் காரணமாக கன்னியாகுமரியில் உள்ள அனைத்து தனியார் விடுதிகளும் முன்பதிவு செய்யப்பட்டு நிரம்பியுள்ளன.
மாவட்டத்தின் பிற முக்கிய இடங்களான திற்பரப்பு அருவி, பத்மநாபபுரம் அரண்மனை மற்றும் பேச்சிப்பாறை அணைப் பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுகிறது.
கடற்கரைச் சாலை மற்றும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
கடற்கரைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிக்காகப் போலீசாரும், கடலோரப் பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் தீவிரப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b