கடலூரில் சிப்காட், என்எல்சி விரிவாக்கத்துக்காக நிலம் கையகப்படுத்துவதைக் கைவிட வேண்டும்- அன்புமணி
தமிழ்நாடு, 20 செப்டம்பர் (ஹி.ச.) கடலூர் மாவட்டத்தில் புதிய சிப்காட் வளாகம் அமைப்பதற்காக தியாகவல்லி, குடிக்காடு பகுதிகளில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 1,097 ஏக்கர் நிலங்களுடன் மேலும் 164.20 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கை
அன்புமணி


தமிழ்நாடு, 20 செப்டம்பர் (ஹி.ச.)

கடலூர் மாவட்டத்தில் புதிய சிப்காட் வளாகம் அமைப்பதற்காக தியாகவல்லி, குடிக்காடு பகுதிகளில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 1,097 ஏக்கர் நிலங்களுடன் மேலும் 164.20 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஏற்கனவே நிலப்பறிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளால் கடலூர் மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் சிப்காட் வளாகங்களையும், நிலக்கரி சுரங்கங்களையும் திணிப்பது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

கடலூரில் ஏற்கனவே 2,625 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் வளாகம் செயல்பட்டு வரும் நிலையில், குடிக்காடு மற்றும் தியாகவல்லி பகுதிகளில் 1,119 ஏக்கரில் புதிய சிப்காட் வளாகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக 1,097 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த கடந்த ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், தற்போது மேலும் 164.20 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

புதிதாக அறிவிக்கப்பட்ட நிலங்களில் 75 சதவீதம் பெரு நிறுவனங்களுக்கு சொந்தமானவை என்றாலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 1,119 ஏக்கருடன் சேர்த்து மொத்தம் 1,283 ஏக்கரில் புதிய சிப்காட் வளாகம் அமையும் நிலை ஏற்பட்டுள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.

இது கடலூரில் ஏற்கனவே உள்ள சிப்காட் வளாகத்துடன் இணைந்தால் மொத்தம் 3,968 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய சிப்காட் வளாகமாக மாறும் என்றும், இது கடலூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பதிலாக பேரழிவாக அமையும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

மேலும், என்எல்சி சுரங்கம் 1 விரிவாக்கத்திற்காக கங்கைகொண்டான் கிராமத்தில் 12.60 ஏக்கர் பரப்பளவில் 68 நிலங்களும், சுரங்கம் 1ஏ விரிவாக்கத்திற்காக வானதிராயபுரம் கிராமத்தில் 3.21 ஏக்கர் பரப்பளவில் 77 நிலங்களும் கையகப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவை வீட்டுமனை நிலங்கள் என்பதால், அவை கையகப்படுத்தப்பட்டால் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்விடத்தை இழக்கும் நிலை ஏற்படக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள இரசாயன ஆலைகளின் கழிவுகளால் நிலம், நீர், காற்று மாசுபடுவதாகவும், என்எல்சி நிலக்கரி சுரங்கங்களாலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தச் சூழலில் மேலும் 1,283 ஏக்கரில் சிப்காட் அமைக்கப்பட்டால் கடலூர் மாவட்டம் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பை எதிர்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.

குடிக்காடு, தியாகவல்லி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் மட்டுமே மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருப்பதாகவும், வளமான விளைநிலங்களை கையகப்படுத்துவதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நிலங்களுக்கான இழப்பீடு குறித்து அரசு கூறும் தொகைக்கும், அப்பகுதியின் உண்மையான சந்தை மதிப்புக்கும் இடையே பெரிய வேறுபாடு இருப்பதாகவும் அன்புமணி தெரிவித்துள்ளார்.

எனவே, கடலூர் மாவட்டத்தில் புதிய சிப்காட் அமைக்கும் திட்டத்தையும், என்எல்சி சுரங்கம் 1 மற்றும் 1ஏ விரிவாக்கத் திட்டங்களையும், அவற்றுக்காக நிலங்களை கையகப்படுத்துவதற்கான அறிவிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இல்லையெனில் பாதிக்கப்படும் மக்களைத் திரட்டி பாமக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அன்புமணி இராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P