ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பு செய்யாதவர்களுக்கும் சிலிண்டர் விநியோகம் தொடரும் - மானியம் மட்டும் ரத்து
சென்னை, 20 செப்டம்பர் (ஹி.ச.) சமையல் எரிவாயு சிலிண்டர் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பு தொடர்பாக நிலவி வந்த குழப்பத்திற்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. ஆதார் பயோமெட்ரிக் சர
ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பு செய்யாதவர்களுக்கும் சிலிண்டர் விநியோகம் தொடரும் - மானியம் மட்டும் ரத்து


சென்னை, 20 செப்டம்பர் (ஹி.ச.)

சமையல் எரிவாயு சிலிண்டர் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பு தொடர்பாக நிலவி வந்த குழப்பத்திற்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பை

(Biometric Aadhaar Authentication - BAA) இதுவரை முடிக்காதவர்களுக்கு சிலிண்டர் வினியோகம் ஒருபோதும் நிறுத்தப்படாது என அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தகுதியான குடும்பங்களுக்கு எல்பிஜி வழங்குவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை கொண்டுவரப்படவில்லை என்றும், போலி இணைப்புகளை நீக்குவதற்கும், மானிய சிலிண்டர்கள் வணிக பயன்பாட்டிற்கு தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காகவுமே இந்த சரிபார்ப்பு முறை அமல்படுத்தப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், மானிய விலையில் சிலிண்டர் பெற விரும்புவோர் கட்டாயம் ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடித்திருக்க வேண்டும் என்றும் அமைச்சகம் எச்சரித்துள்ளது. இதன்படி, ஆதார் பதிவை மேற்கொள்ளாத வாடிக்கையாளர்களுக்கு வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் மானியம் வழங்கப்படாது. அரசின் சமீபத்திய அறிவிப்பின்படி அக்டோபர் 1 முதல் இந்த புதிய விதி அமலுக்கு வருகிறது, முன்னதாக ஆகஸ்ட் 1 என அறிவிக்கப்பட்ட காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

பயோமெட்ரிக் சரிபார்ப்பை செய்ய விரும்பாதவர்கள், தங்களது விருப்பத்தை எண்ணெய் நிறுவனங்களின் இணையதளம், மொபைல் செயலி, வாட்ஸ்அப் சாட்பாட் அல்லது IVRS மூலம் பதிவு செய்தால், அவர்களுக்கு மானியம் இன்றி சந்தை விலையில் 5 கிலோ அல்லது 10 கிலோ சிலிண்டர்கள் இருப்புக்கு ஏற்ப தொடர்ந்து வழங்கப்படும் என்றும், ஏற்கெனவே சரிபார்ப்பை முடித்தவர்கள் மீண்டும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b