Enter your Email Address to subscribe to our newsletters

தர்மபுரி, 20 செப்டம்பர் (ஹி.ச.)
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் மாரண்டஹள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு தொடர்ந்து கனமழை பெய்தது.
இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தாழ்வான விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியது.
இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல் மற்றும் சிறுதானிய பயிர்கள் நீரில் மூழ்கின.
குறிப்பாக அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
வயல்களில் அதிகளவில் தண்ணீர் தேங்கியுள்ளதால், அதனை உடனடியாக வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பயிர்கள் சேதமடையும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர் மழை காரணமாக மேலும் தண்ணீர் தேங்கினால் விவசாய நிலங்களில் பாதிப்பு அதிகரிக்கக்கூடும் எனவும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே செவத்தப்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்துக்குள்ளும் கனமழை காரணமாக வெள்ளநீர் புகுந்தது. பள்ளி வளாகம் மற்றும் மைதானம் முழுவதும் மழைநீர் தேங்கியதால், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியிருப்பது குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
தொடர்ந்து தீயணைப்புத் துறையினருடன் இணைந்து பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளுக்குச் செல்வதை பொதுமக்கள் தவிர்த்து, அவசர நிலை ஏற்பட்டால் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ