தருமபுரி அருகே தண்டவாளத்தில் பாறை விழுந்து ரயில் சேதம்
தர்மபுரி, 20 செப்டம்பர் (ஹி.ச.) தருமபுரி அருகே கனமழையால் ஏற்பட்ட மண்ணரிப்பின் காரணமாக மலைப்பகுதியில் இருந்து பாறை உருண்டு தண்டவாளத்தில் விழுந்ததில், நாகர்கோவில்–பெங்களூரு விரைவு ரயிலின் சக்கரப் பகுதியில் சேதம் ஏற்பட்டது. இன்று (செப்.20) நாகர்கோவி
ரயில்


தர்மபுரி, 20 செப்டம்பர் (ஹி.ச.)

தருமபுரி அருகே கனமழையால் ஏற்பட்ட மண்ணரிப்பின் காரணமாக மலைப்பகுதியில் இருந்து பாறை உருண்டு தண்டவாளத்தில் விழுந்ததில், நாகர்கோவில்–பெங்களூரு விரைவு ரயிலின் சக்கரப் பகுதியில் சேதம் ஏற்பட்டது.

இன்று (செப்.20) நாகர்கோவிலில் இருந்து பெங்களூரு எஸ்.எம்.வி.டி. நோக்கி 17236-வது எண் கொண்ட விரைவு ரயில் புறப்பட்டுச் சென்றது.

முத்தம்பட்டி–சிவாடி ரயில் நிலையங்களுக்கு இடையே, சுமார் 51/800 முதல் 51/900 கி.மீ. பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தபோது, கனமழையால் ஏற்பட்ட மண்ணரிப்பின் காரணமாக அருகில் உள்ள குன்றில் இருந்து பாறைக்கல் ஒன்று தண்டவாளத்தில் உருண்டு விழுந்ததாக கூறப்படுகிறது.

அப்போது ரயிலின் முன்பக்க பொதுப்பெட்டியின் சக்கரப் பகுதிக்கு அருகே இருந்த அதிர்வுத் தடுப்பானில் பாறை பலமாக மோதியதில் அந்தப் பகுதி சேதமடைந்தது.

இதையடுத்து ரயில் பாதுகாப்பாக தருமபுரி ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு நிறுத்தப்பட்டது.

தகவலறிந்த ரயில்வே தொழில்நுட்பப் பணியாளர்கள், சேதமடைந்த பாகத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தருமபுரி இருப்புப்பாதை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam