சிவகங்கை இரட்டைக் கொலை - பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு சுகாதாரத் துறையில் அரசு வேலை
சிவகங்கை, 20 செப்டம்பர் (ஹி.ச.) சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள குருந்தனிவாரியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த தெய்வேந்திரன் (27) மற்றும் சிறுவேலங்குடியைச் சேர்ந்த பூபாண்டி (25) ஆகிய இருவரும் கடந்த செப்டம்பர் 16-ம் தேதி சிவகங்கை - காளைய
சிவகங்கை இரட்டைக் கொலை - பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு சுகாதாரத் துறையில் அரசு வேலை


சிவகங்கை, 20 செப்டம்பர் (ஹி.ச.)

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள குருந்தனிவாரியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த தெய்வேந்திரன் (27) மற்றும் சிறுவேலங்குடியைச் சேர்ந்த பூபாண்டி (25) ஆகிய இருவரும் கடந்த செப்டம்பர் 16-ம் தேதி சிவகங்கை - காளையார்கோவில் சாலையில் உள்ள பழமலைநகர் கொடிக்காடு கண்மாய் அருகே புதிய காரில் வந்து நின்றபோது, இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பலால் கண்மாய்க்குள் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த கொடூர கொலையில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் உடல்களை வாங்க மறுத்து கடந்த மூன்று நாட்களாக காளையார்கோவிலில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதால் மதுரை - தொண்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் நடவடிக்கையாக அரசு பணி வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கொலை செய்யப்பட்ட பூபாண்டியின் சகோதரி பூமணிக்கு சுகாதாரத் துறையில் டெங்கு ஒழிப்பு களப்பணியாளர் (மஸ்தூர்) பணிக்கான பணி ஆணை வழங்கப்பட்டது.

அதேபோல், கொல்லப்பட்ட தெய்வேந்திரனின் தம்பி ராதாகிருஷ்ணனுக்கும் டெங்கு மஸ்தூர் பணிக்கான பணி ஆணை வழங்கப்பட்டது.

அரசு வேலைக்கான ஆணைகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டு உடல்களைப் பெற்றுக்கொள்ளச் சம்மதித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b