Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 செப்டம்பர் (ஹி.ச.)
மகாத்மா காந்தியின் பிறந்தநாளான காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் அக்டோபர் 2-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்தக் கூட்டம் குறித்த தகவலை பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆண்டுதோறும் குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய நான்கு சிறப்பு நாட்களில் கிராம சபைக் கூட்டங்கள் கட்டாயமாக நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெறவுள்ள இந்த கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்களின் பங்கேற்பை அதிகரிக்கும் நோக்கில் இந்த முன்னறிவிப்பு நடவடிக்கைக்கு அரசு முக்கியத்துவம் அளித்துள்ளது.
இது தொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநரகம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், கிராம சபைக் கூட்டம் நடைபெறும் இடம், நேரம் மற்றும் விவாதிக்கப்பட உள்ள பொருள்கள் குறித்து தண்டோரா மூலமாகவும், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் ஒலிபெருக்கி மூலமாகவும் கிராம மக்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சித் திட்டங்கள், குடிநீர் வசதி, தூய்மைப் பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b