85 வயதில் முதுகலை பட்டம் பெற்ற முன்னாள் ராணுவ வீரர்
சண்டிகர் , 20 செப்டம்பர் (ஹி.ச.) அரியானா மாநிலம் சிர்சா பகுதியை சேர்ந்தவர் லால் சந்த் கோதாரா (வயது 85). முன்னாள் ராணுவ வீரரான இவர், இளமை காலத்தில் பாதியில் நின்ற தனது கல்வியை மீண்டும் தொடர வேண்டும் என்ற ஆர்வத்துடன், வயது தடையை பொருட்படுத்தாமல் படி
A


சண்டிகர் , 20 செப்டம்பர் (ஹி.ச.)

அரியானா மாநிலம் சிர்சா பகுதியை சேர்ந்தவர் லால் சந்த் கோதாரா (வயது 85). முன்னாள் ராணுவ வீரரான இவர், இளமை காலத்தில் பாதியில் நின்ற தனது கல்வியை மீண்டும் தொடர வேண்டும் என்ற ஆர்வத்துடன், வயது தடையை பொருட்படுத்தாமல் படித்து வருகிறார்.

20 வயதுக்கு முன்பே ராணுவத்தில் சேர்ந்த லால் சந்த் கோதாரா, பின்னர் அரியானா போக்குவரத்துத் துறையில் யார்டு மாஸ்டராக பணியாற்றினார்.

2002-ம் ஆண்டு அந்த பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

அதன்பிறகு விளையாட்டிலும் ஆர்வம் காட்டிய அவர், ‘மாஸ்டர்ஸ்’ தடகள போட்டிகளில் பங்கேற்று மாநில அளவிலான போட்டிகள் உள்பட பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளார்.

இந்த நிலையில், தனது கல்வியை மீண்டும் தொடர வேண்டும் என்ற விருப்பத்துடன் 76 வயதில் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க தொடங்கினார்.

தொடர்ந்து படித்து வந்த அவர், கடந்த 2023-ம் ஆண்டு தனது இளங்கலை பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.

இதையடுத்து முதுகலை படிப்பிலும் சேர்ந்தார்.

விடாமுயற்சியுடன் படித்த அவர், தற்போது தனது 85-வது வயதில் முதுகலை பட்டத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து லால் சந்த் கோதாரா கூறுகையில்,

வாழ்க்கை சூழல் என்னை வேறு திசைகளில் பயணிக்க வைத்ததால், கல்வி என்பது வாழ்க்கையில் முழுமையடையாத அத்தியாயமாகவே இருந்தது. கற்றுக்கொள்வதற்கான ஆர்வம் எந்த வயதிலும் நின்றுவிடக்கூடாது.

கல்வி ஒருவரின் கண்ணோட்டத்தை விரிவுபடுத்துகிறது என்றார்.

முதுகலை பட்டம் பெற்றுள்ள அவர்,

அடுத்ததாக முனைவர் பட்டம் (பி.எச்.டி.) அல்லது சட்டப்படிப்பை தொடர்வது குறித்து பரிசீலித்து வருகிறார்.

வயது என்பது கல்விக்கு தடையல்ல என்பதை தனது முயற்சியின் மூலம் லால் சந்த் கோதாரா நிரூபித்துள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA