Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 20 செப்டம்பர் (ஹி.ச.)
ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த பாஜக தலைமையிலான மத்திய அரசு, 12 ஆண்டுகள் கடந்தும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2014-ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் மோடி அரசு, ஆண்டுதோறும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என இளைஞர்களுக்கு வாக்குறுதி அளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் கணக்கின்படி 12 ஆண்டுகளில் 24 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும் என்றும், ஆனால் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் தொடர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2026 ஆகஸ்ட் மாதம் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள Reimagining Skilling for Viksit Bharat@2047 அறிக்கையில், 15 முதல் 29 வயதுக்குட்பட்ட சுமார் 8.7 கோடி பேர் கல்வி, வேலை அல்லது தொழிற்பயிற்சியில் ஈடுபடாமல் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
அதே அறிக்கையில், 79.6 கோடி பேர் தொழிலாளர் சந்தைக்கு வெளியே இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பட்டதாரிகளுக்கு அவர்களின் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் மற்றும் பெண்களின் வேலைவாய்ப்பு நிலை குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கல்வி மற்றும் தொழிற்பயிற்சியுடன் வேலைவாய்ப்பை இணைப்பதில் இன்னும் பல்வேறு சவால்கள் இருப்பதாக நிதி ஆயோக் அறிக்கையும் குறிப்பிடுகிறது.
ஒருபுறம் மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு மாணவர்களின் கனவுகளைப் பாதிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், மறுபுறம் இளைஞர்களுக்கு போதுமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.
இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்குவதாகக் கூறும் மத்திய அரசு, அவர்களுக்கான கண்ணியமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் செப்டம்பர் 2026-ல் வெளியிட்டுள்ள மாவட்ட அளவிலான தொழிலாளர் சந்தை தொடர்பான அறிக்கையை சுட்டிக்காட்டியுள்ள அவர், நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இளைஞர்கள் கல்வி அல்லது வேலைவாய்ப்பின்றி இருப்பதாக தெரிவித்துள்ளார். மத்திய புள்ளியியல் அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வெளியீடுகளில், செப்டம்பர் 18, 2026 அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களின் தொழிலாளர் சந்தை குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டிலும் இந்த நிலை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ள மாணிக்கம் தாகூர், திருவள்ளூர், திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இளைஞர்களிடையே வேலைவாய்ப்பு தொடர்பான சிக்கல்கள் அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கிராமப்புறத் தமிழ்நாட்டில் நிலையான ஊதிய வேலைவாய்ப்புகள் போதிய அளவில் கிடைக்காததால், பல குடும்பங்கள் முறைசாரா தினக்கூலி வேலைகளை நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தேசிய அளவில் கோடிக்கணக்கான இளைஞர்களின் உழைப்பும் திறமையும் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பது கவலைக்குரியது என்றும், வேலைவாய்ப்பை உருவாக்குவதில் மத்திய அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது அறிக்கையில் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P