Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 20 செப்டம்பர் (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிடும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், மரகதம் குமரவேலை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் 2 நாட்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக வரும்
25-ம் தேதி மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட அச்சரப்பாக்கத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்று, விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.
இதற்காக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அச்சரப்பாக்கம் வஜ்ரகிரி மலை அடிவாரத்தில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
பந்தக்கால் நடப்பட்டு, தற்போது முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பொதுக்கூட்டத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் வரை பங்கேற்க அனுமதி வழங்கப்பட உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கூட்டத்திற்காக பிரத்தியேக டிஜிட்டல் மேடை மற்றும் கூடாரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், பொதுக்கூட்டத்திற்கு வரும் பொதுமக்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக தனியாக வாகன நிறுத்துமிடமும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
மேடை மற்றும் பிற ஏற்பாடுகள் நடைபெறும் இடத்தை காவல்துறையினர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam