Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 செப்டம்பர் (ஹி.ச.)
செவிலியர்கள் பணி நியமனம் மற்றும் பணி மாறுதலில் முழுமையான வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படும் என்றும், பணம் கொடுத்தால் பணி நியமனம் அல்லது பணி மாறுதல் பெற்றுத் தருவதாக யாராவது கூறினால் அதை நம்ப வேண்டாம் என்றும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கத்தின் 8-வது மாநில மாநாட்டில் அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது:
நான் மருத்துவம் பயிலும்போது எனக்கு ஊசி போடக் கற்றுக்கொடுத்தது செவிலியர்தான். செவிலியர்களின் நலனில் இந்த அரசு உறுதியாக இருக்கும். முதலமைச்சர் விஜய்க்கு செவிலியர்கள் மீது அன்பும் அக்கறையும் உள்ளது.
முதலமைச்சர் விஜய் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பிறந்தவர். அந்த மருத்துவமனைக்கு ஆய்வுக்காக சென்றபோது, செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
செவிலியர் பற்றாக்குறையை போக்குவதற்காக மாவட்ட நலச் சங்கங்கள் மூலம் 4,724 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்காக 4,724 பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளன. யாரும் அச்சப்பட தேவையில்லை. ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் 2,500 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
மேலும், புதிதாக தொடங்கப்பட உள்ள செவிலியர் கல்லூரிகளில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் செவிலியர்கள் தகுதியின் அடிப்படையில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள். செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.
பணி மாறுதல் அல்லது பணி நியமனம் பெற்றுத் தருவதாகக் கூறி யாராவது பணம் கேட்டால் யாரும் நம்ப வேண்டாம். பணி நியமனம் மற்றும் பணி மாறுதல் ஆகியவை முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும்.
பணி நியமனம் தொடர்பாக யாராவது பணம் கேட்பதாக புகார் வந்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட சுகாதார அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மருத்துவப் பணியாளர்களை செவிலியர்கள் கனிவுடன் நடத்த வேண்டும். செவிலியர்களின் நலனில் அரசு தொடர்ந்து உறுதியாக செயல்படும்.
இவ்வாறு அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ