Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 செப்டம்பர் (ஹி.ச.)
ஹரிஷ் சினிமாஸ் சார்பில்
ஏ.அழகு பாண்டியன் தயாரித்து பிரபுராம் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்
நல்ல படம்
இத்திரைப்படத்தில், ஹரிஷ், தனலட்சுமி, மொட்ட ராஜேந்திரன் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மது பழக்கத்தை மையமாக வைத்து, அதனைச் சுற்றி ஒரு மனிதனின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை நகைச்சுவை, காதல் மற்றும் குடும்ப உணர்வுகளுடன் சொல்ல முயற்சிக்கும் திரைப்படமாக வெளியாகியுள்ளது ‘நல்ல படம்’.
படத்தின் நாயகன் ஹரிஷ் (குமரன்) வாழ்க்கையே மதுவைச் சுற்றித்தான் நகர்கிறது.
குடிப்பதை ஒரு பழக்கமாக மட்டுமல்லாமல், வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே நினைக்கும் அவரைச் சுற்றி நண்பர்கள், குடும்பம் மற்றும் காதல் என கதை நகர்கிறது.
அவருடைய மதுப்பழக்கத்தை மாற்ற வேண்டும் என்று குடும்பத்தினரும் காதலியும் தொடர்ந்து முயற்சி செய்கின்றனர்.
ஒரு கட்டத்தில் நாடு முழுவதும் மதுவுக்கு தடை என்ற சூழல் உருவாக, குமரனின் வாழ்க்கையே தலைகீழாக மாறுகிறது.
இதற்குப் பிறகு அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், மதுவைத் தேடி அவர் மேற்கொள்ளும் முயற்சிகளும் படத்தின் முக்கியமான பகுதியாக அமைந்துள்ளன.
முதல் பாதியில் மதுப்பழக்கத்தைச் சுற்றிய காட்சிகள் அதிகமாக இடம் பெற்றாலும், அவற்றை நகைச்சுவையாகக் கொண்டு செல்ல இயக்குநர் முயற்சி செய்திருக்கிறார். சில காட்சிகள் சிரிக்க வைக்கின்றன, சில காட்சிகள் சிந்திக்கவும் வைக்கின்றன.
நாயகனாக நடித்துள்ள ஹரிஷ், போதையில் இருக்கும் கதாபாத்திரத்தின் உடல்மொழி மற்றும் நகைச்சுவை காட்சிகளில் இயல்பாக நடித்துள்ளார்.
காதல் காட்சிகளிலும் கதாபாத்திரத்திற்கு தேவையான அளவில் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
தனலட்சுமி தனது கதாபாத்திரத்தை சிறப்பாக கையாள்கிறார்.
மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட நடிகர்கள் வரும் காட்சிகள் படத்திற்கு கூடுதல் கலகலப்பை கொடுக்கின்றன.
படத்தின் இரண்டாம் பாதியில் வரும் சமூகக் கருத்து கதைக்கு ஓரளவு அழுத்தம் சேர்க்கிறது. மதுப்பழக்கம் ஒருவரை மட்டும் பாதிப்பதில்லை,அவரைச் சுற்றியுள்ள குடும்பத்தையும் பாதிக்கிறது என்பதை படம் எடுத்துக்காட்டுகிறது.
ஒளிப்பதிவு படத்தின் மற்றொரு பலமாக உள்ளது. குறிப்பாக ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சகிஷ்னா சேவியரின் இசையும் படத்தின் காட்சிகளுக்கு பொருத்தமாக பயணிக்கிறது.
அதே நேரத்தில், சில இடங்களில் திரைக்கதை வேகம் குறைவது படத்தின் ஓட்டத்திற்கு சிறிய தடையாக இருக்கிறது.
குறிப்பாக முதல் பாதியில் ஒரே மாதிரியான மதுக்காட்சிகள் மீண்டும் மீண்டும் வருவது சிலருக்கு சற்று நீளமாகத் தோன்றலாம்.
மொத்தத்தில், ‘நல்ல படம்’ முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமாக மட்டும் இல்லாமல், மதுப்பழக்கத்தின் தாக்கம் குறித்து சிந்திக்க வைக்கும் முயற்சியாகவும் அமைந்துள்ளது.
பொழுதுபோக்குடன் ஒரு சமூகக் கருத்தையும் சொல்ல முயற்சித்திருக்கும் இந்தப் படத்தை ஒருமுறை பார்க்கலாம்.
ஹிந்துஸ்தான் சமாச்சார் மதிப்பீடு: ⭐⭐⭐
Hindusthan Samachar / Durai.J