Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 20 செப்டம்பர் (ஹி.ச.)
டெல்லியில் இருந்து நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, விமானம் மீண்டும் டெல்லி விமான நிலையத்திற்கே திருப்பி விடப்பட்டது.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகல் 2.42 மணியளவில், 150 பயணிகளுடன் ஏர் இந்தியாவுக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320 விமானம் காத்மாண்டு நோக்கி புறப்பட்டது.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தொடர்ந்து பயணிப்பது பாதுகாப்பானதாக இருக்காது எனக் கருதிய விமானி, விமானத்தை மீண்டும் டெல்லிக்கு திருப்ப முடிவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளை தொடர்பு கொண்ட விமானி, நிலைமை குறித்து தகவல் தெரிவித்து டெல்லியில் மீண்டும் தரையிறங்க அனுமதி கோரினார்.
அனுமதி கிடைத்ததும் விமானம் டெல்லி விமான நிலையத்துக்கு திரும்பி பாதுகாப்பாக தரையிறங்கியது.
விமானம் தரையிறங்கியதும் அதில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
பின்னர், விமானத்தில் ஏற்பட்டதாக கூறப்படும் தொழில்நுட்ப கோளாறை ஆய்வு செய்து சரிசெய்யும் பணியில் தொழில்நுட்பக் குழுவினர் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
டெல்லியில் இருந்து காத்மாண்டுவுக்கு புறப்பட்ட ஏஐ-1219 விமானம், தொழில்நுட்ப கோளாறு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மீண்டும் டெல்லிக்கே திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
பின்னர் பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலம் காத்மாண்டுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 3-ல் இருந்து மாற்று விமானம் நேற்று மாலை 6.17 மணியளவில் காத்மாண்டு நோக்கி புறப்பட்டுச் சென்றதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA