Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 செப்டம்பர் (ஹி.ச.)
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் நாளை முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை நண்பகல் 12 மணியளவில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் பங்கேற்க உள்ளனர்.
மேலும், சென்னை, டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் காணொளி காட்சி வாயிலாக இந்த ஆலோசனையில் இணைய உள்ளனர்.
இந்தக் கூட்டத்தில், வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கு மற்றும் பாதிப்புகளைத் தடுக்கும் வகையில், நீர்நிலைகளை தூர்வாருதல், ஏரி, குளங்களில் நீர் வரத்து கால்வாய்களை சீரமைத்தல், மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடித்தல், பலவீனமான மின்கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளை சீரமைத்தல், மரங்களின் ஆபத்தான கிளைகளை அகற்றுதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
மேலும், நிவாரண முகாம்கள், மருத்துவக் குழுக்கள், பேரிடர் மீட்பு குழுக்களை தயார் நிலையில் வைப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b