Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில், அனைத்து வகையான மதுபானங்களையும் சமமான அளவில் கொள்முதல் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவை டாஸ்மாக் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
கடந்த சில மாதங்களாக, குறிப்பிட்ட சில பிராண்டுகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, அனைத்து நிறுவனங்களின் மதுபானங்களையும் சமமாக கொள்முதல் செய்ய வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், கடைகளில் விற்பனை நிலவரத்திற்கு ஏற்ப கொள்முதல் இல்லாததால், தேவையில்லாத இருப்பு தேங்குவதாகவும், வாடிக்கையாளர்கள் கேட்கும் பிராண்டுகள் கிடைக்காமல் போவதாகவும் கடை மேலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை பரிசீலித்த டாஸ்மாக் நிர்வாகம், தற்போது அந்த உத்தரவை ரத்து செய்து புதிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதன்படி, வரும் செப்டம்பர் 21-ம் தேதி முதல், ஒவ்வொரு கடையிலும் எந்தெந்த மதுபான வகைகளுக்கு தேவை அதிகம் உள்ளதோ, அந்த வகைகளை மட்டுமே கொள்முதல் செய்து கொள்ளலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விற்பனைக்கு ஏற்றவாறு இருப்பை பராமரிக்க முடியும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, டாஸ்மாக் ஊழியர்களுக்கு பண்டிகை காலத்தை முன்னிட்டு முன்பணம் வழங்கவும் டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் பண்டிகை கால முன்பணமாக ரூபாய் 20 ஆயிரம் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த முன்பணத்தை ஊழியர்கள் வருடத்திற்கு ஒருமுறை, தாங்கள் விரும்பும் பண்டிகையான தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளுக்கு ஏற்ப பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பெறப்படும் ரூபாய் 20 ஆயிரம் முன்பணம், 10 தவணைகளாக ஊழியர்களின் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b