Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னை பட்டினப்பாக்கம் ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதியில் தலைமைச் செயலகம் கட்டுவதற்கு அரசு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், முதலமைச்சர் விஜய்க்கு இதுகுறித்து தெரியாது என்று கூறுவது மக்களை ஏமாற்றும் செயல் என திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மாற்றம் எனக் கூறியவர்கள் அண்டப் புளுகு என்பதை ஆதவ் அர்ஜுனா புளுகு என மாற்றிவிட்டார்களோ என விமர்சித்துள்ளார். வாயைத் திறந்தாலே பொய் என்பதற்கு உதாரணமாக அமைச்சரின் சமீபத்திய கருத்து அமைந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் முடிவை முதலமைச்சர் விஜய் இன்னும் எடுக்கவில்லை என கூறப்படுவதாகவும், ஏமாற்றிப் பழகிவிட்டோம் என்பதற்காக எதைச் சொன்னாலும் மக்கள் நம்பி ஏமாந்துவிடுவார்கள் என்று நினைப்பதா என்றும் இ.பரந்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தலைமைச் செயலகத்தை எந்த இடத்தில் கட்டுவது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு, பல்வேறு இடங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தால், முதலமைச்சர் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கூறுவதில் நியாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், பட்டினப்பாக்கம் ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதியில் 25.55 ஏக்கர் நிலத்தில் சுமார் ரூ.1,200 கோடி மதிப்பில் தலைமைச் செயலகம் கட்டுவதற்கு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அரசாணை வெளியாகியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தலைமைச் செயலகம் கட்டப்பட உள்ள கட்டடத்தின் பரப்பளவு, வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலத்தின் அளவு, வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான அரசு நிலத்தின் அளவு உள்ளிட்ட விவரங்கள் வரை அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இ.பரந்தாமன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு விரிவான விவரங்களுடன் அரசாணை வெளியாகியுள்ள நிலையில், இது முதலமைச்சருக்குத் தெரியாமல் எப்படி வெளியிடப்பட்டது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். முதலமைச்சருக்கு தெரியாமல் இத்தகைய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது என்றும், முதலமைச்சரை பெயரளவிலான பதவியில் வைத்துக் கொண்டு தலைமைச் செயலகம் கட்டும் பணிகளை மேற்கொள்ளும் சக்தி எது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
எல்லா தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வகையில் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இ.பரந்தாமன் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், மீனவர்களின் நலனும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்றால், அவர்களுக்கு திமுக எந்த எல்லைக்கும் சென்று துணை நிற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொய் கூறி, பிரச்சினையை திசைதிருப்பி மக்களை ஏமாற்றும் போக்கை தவெக அரசு கைவிட்டு, நேர்மையாக மக்களை எதிர்கொண்டு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் இ.பரந்தாமன் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ