Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 செப்டம்பர் (ஹி.ச.)
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தலையொட்டி வரும் அக்டோபர் 6-ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் சாய் குமார் வெளியிட்டுள்ள அரசாணையில்,
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாகவும், வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை தவறாமல் ஆற்ற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அன்றைய தினம் அந்த இரு தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பொது விடுமுறை அறிவிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொது விடுமுறை நாளில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு விடுமுறை பொருந்தும் என்றும், செலாவணி முறிச் சட்டத்தின் கீழ் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களும் இயங்காது என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களது வாக்குரிமையை பயன்படுத்த ஏதுவாக, அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b