புதுச்சேரி ஈசிஆரில் ரவுடி ஆனந்த் கொலை - 5 பேர் கைது மேலும் 3 பேரை பிடிக்க மதுரையில் தனிப்படை போலீசார் முகாம்
புதுச்சேரி, 20 செப்டம்பர் (ஹி.ச.) புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஆனந்த் என்கிற முண்டக்கண்ணு ஆனந்த் (33) கடந்த 18-ஆம் தேதி ஈசிஆர் சாலையில் மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவர் மீது கொலை, அடிதடி, கொள்ளை உள
கைது


புதுச்சேரி, 20 செப்டம்பர் (ஹி.ச.)

புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஆனந்த் என்கிற முண்டக்கண்ணு ஆனந்த் (33) கடந்த 18-ஆம் தேதி ஈசிஆர் சாலையில் மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

அவர் மீது கொலை, அடிதடி, கொள்ளை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆனந்த் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, 8 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதுகுறித்து அவரது மனைவி ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கருவடிக்குப்பத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜெகனின் கூட்டாளியான சந்துரு உள்ளிட்டோர் கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சீர்காழி, திண்டிவனம், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் அனுமந்தை பகுதியில் பதுங்கியிருந்த 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், பூத்துறை பகுதியில் பதுங்கியிருந்த மேலும் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சந்துரு, சஞ்சய், ராஜ்கமல், சந்தோஷ் மற்றும் நாகராஜ் என்பது தெரியவந்தது. இவர்களில் சந்துரு மற்றும் சஞ்சய் ஆகியோர் போலீசாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது தடுமாறி கீழே விழுந்ததில் கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து இருவருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து 5 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள 3 பேரை கைது செய்வதற்காக தனிப்படை போலீசார் மதுரையில் முகாமிட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam