Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பத்தூர், 20 செப்டம்பர் (ஹி.ச.)
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தமிழக–ஆந்திர மாநில எல்லைப் பகுதிகள் மற்றும் பாலாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக, வாணியம்பாடி அருகே தமிழக–ஆந்திர எல்லைப் பகுதியான புல்லூர் கனகநாச்சியம்மன் கோவில் அருகே, ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே கட்டியுள்ள சுமார் 22 அடி உயர தடுப்பணை தற்போது முழுமையாக நிரம்பியுள்ளது.
தடுப்பணை நிரம்பியதை தொடர்ந்து, அதிலிருந்து வெளியேறும் உபரி நீர் பாலாற்றில் பெருக்கெடுதது தமிழகப் பகுதிக்கு வந்து கொண்டிருக்கிறது.
இந்த ஆண்டில் முதல் முறையாக புல்லூர் தடுப்பணை நிரம்பி உபரி நீர் தமிழக பாலாற்றில் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நீர் தமிழகப் பகுதியில் பாலாற்றின் குறுக்கே இராமநாயக்கன்பேட்டையில் தமிழக அரசு கட்டியுள்ள முதல் தடுப்பணை பகுதியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
பாலாற்றில் நீர்வரத்து தொடங்கியதை வரவேற்கும் விதமாக விவசாயிகள் மற்றும் பாலாறு பாதுகாப்பு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் தண்ணீருக்கு பூஜை செய்து, கற்பூரம் ஏற்றி, மலர்கள் தூவி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
மேலும், பாலாற்றில் பெருக்கெடுத்து வரும் நீரை காண சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.
பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P