Enter your Email Address to subscribe to our newsletters

ராணிப்பேட்டை, 20 செப்டம்பர் (ஹி.ச.)
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவமழை மற்றும் தட்பவெப்பநிலை மாற்றம் காரணமாக வாலாஜா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காய்ச்சல், சளி, இருமல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதில் குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர் காய்ச்சல், உடல்வலி, தலைவலி மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகளுடன் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு வந்தவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்களை உள்நோயாளிகளாக அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அனுமதிக்கப்பட்ட 38 பேரில் பெரும்பாலானோர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது முதற்கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
அவர்களுக்கு தனி வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அனைவரும் நலமாக இருப்பதாகவும், அச்சப்பட தேவையில்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவருக்கும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறி தென்பட்டவுடன் சுய மருத்துவம் செய்யாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என்றும், குடிநீரை காய்ச்சி வடிகட்டி பருக வேண்டும், வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b