ரூ.3,000 கோடி மோசடி வழக்கு- சேலத்தில் பாஸ்டர் தப்பியோட்டம்
சேலம், 20 செப்டம்பர் (ஹி.ச.) சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள ஜெபக்கூடத்தில் பாஸ்டர் செந்தில்குமார் இன்று ஜெபக் கூட்டம் நடத்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாகக் கூறப்படும் 50-க்கும் மேற்பட்டோர
மோசடி


சேலம், 20 செப்டம்பர் (ஹி.ச.)

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள ஜெபக்கூடத்தில் பாஸ்டர் செந்தில்குமார் இன்று ஜெபக் கூட்டம் நடத்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையறிந்த அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாகக் கூறப்படும் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர்.

அவர்கள் தங்களது பணத்தைத் திருப்பித் தருமாறு செந்தில்குமாரிடம் கேள்வி எழுப்பியதுடன், தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்தும் முறையிட்டனர். பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிய நிலையில், செந்தில்குமார் அங்கிருந்து திடீரென தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், ஜெபக்கூடத்தில் இருந்த நாற்காலிகளைத் தூக்கி வீசி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

அன்னை தெரசா அறக்கட்டளை மீது சுமார் ரூ.3,000 கோடி அளவுக்கு நிதி மோசடி செய்ததாகப் பொருளாதார குற்றப்பிரிவில் வழக்கு நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த செந்தில்குமார், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்த பிறகும் அவர் மீண்டும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகப் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து அப்பகுதியில் ஏற்பட்ட பதற்றத்தைத் தணிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P