Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 20 செப்டம்பர் (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமா, இன்று வெறுவேடம்பாளையம், நந்தம்பாளையம் ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் சென்று, விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் அவரது பிரசார வாகனத்தை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
குறிப்பாக, பி.ஏ.பி. வாய்க்கால் மூலம் உப்பாறு அணைக்கு தண்ணீர் கொண்டு வரும் விவகாரத்தில் சத்தியபாமா தலையிட்டு, தனது அரசியல் லாபத்திற்காக அந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தியதாக அவர்கள் குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது.
மேலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்தியபாமா, பின்னர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததற்கும் பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.
இதுதொடர்பாக, தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையில் வாக்களித்த நிலையில், வெற்றி பெற்ற பின்னர் பதவியை ராஜினாமா செய்தது ஏமாற்றம் அளிப்பதாக அவர்கள் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து சத்தியபாமாவுக்கு எதிராகவும், அவரது அரசியல் நிலைப்பாட்டுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியதாக கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து தாராபுரம் மற்றும் குண்டடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கு இடையே மேலும் பிரச்சினை ஏற்படாத வகையில் போலீசார் கண்காணித்தனர்.
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமாவின் பிரசாரத்தின்போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படும் சம்பவம் தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam