Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 செப்டம்பர் (ஹி.ச)
தமிழகத்தில் 50 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் பணிகளை விரைவுபடுத்தும் வகையில், 4 உதவி பொறியாளர் பணியிடங்களை மறுபணியமர்த்தி தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக அரசின் பட்ஜெட்டில், சென்னையில் உள்ள நுகர்வோர்களுக்கும், பிற பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களுக்கும் 50 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்தும் வகையில் மின்வாரியம் பல்வேறு நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, ஸ்மார்ட் மீட்டர் திட்டப் பணிகளை நிர்வகிப்பதற்காக 4 உதவி பொறியாளர் பணியிடங்களை மறுபணியமர்த்தி தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் நிர்வாகப் பிரிவு சார்பில் வெளியிடப்பட்டுள்ள உத்தரவின்படி, தலைமைப் பொறியாளர்/தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆர்ஏபிடிஆர்பி அலுவலகத்தின் கீழ் நடைபெற்று வரும் ஸ்மார்ட் மீட்டர் செயல்படுத்தும் பணிகளை நிர்வகிக்க இந்த பணியிடங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இதன்படி, தென் காஞ்சிபுரம் கட்டுமானப் பிரிவில் ஒரு உதவி பொறியாளர் பணியிடமும், வட காஞ்சிபுரம் கட்டுமானப் பிரிவில் ஒரு பணியிடமும், மன்னார்குடி கட்டுமானப் பிரிவில் ஒரு பணியிடமும், மயிலாடுதுறை கட்டுமானப் பிரிவில் ஒரு பணியிடமும் என மொத்தம் 4 உதவி பொறியாளர்/மின்சாரம் பணியிடங்கள் மறுபணியமர்த்தப்படுகின்றன.
இந்த பணியிடங்கள் முறையே காஞ்சிபுரம், திருச்சி மற்றும் நாகை மின்விநியோக வட்டங்களில் இருந்து மறுபணியமர்த்தப்படுகின்றன.
மறுபணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு வழக்கமான ஊதியத்துடன் அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி உள்ளிட்ட அனுமதிக்கப்பட்ட படிகள் வழங்கப்படும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
50 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் திட்டத்தை விரைவுபடுத்தும் வகையில், மின்வாரியம் மேற்கொண்டுள்ள இந்த நிர்வாக நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ