Enter your Email Address to subscribe to our newsletters

கரீம்நகர் , 20 செப்டம்பர் (ஹி.ச.)
தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் அடுத்தடுத்து 2 எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையங்களை காஸ்கட்டர் மூலம் உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரீம்நகர் ஊரக போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட துர்ஷெட் மற்றும் எல்.எம்.டி. போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட திம்மாப்பூர் ஆகிய பகுதிகளில் இந்த கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
துர்ஷெட் பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு அதிகாலை சுமார் 3.30 மணியளவில் காரில் வந்த கொள்ளையர்கள் 2 பேர், அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மீது திரவத்தை தெளித்தனர். பின்னர் காஸ்கட்டர் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை வெட்டி உடைத்து, அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்தனர். இதில் சுமார் ரூ.8 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதேபோல் திம்மாப்பூரில் உள்ள எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையத்திலும் எந்திரத்தை காஸ்கட்டர் மூலம் உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அங்கு எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டது என்பது குறித்து போலீசார் கணக்கிட்டு வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தொப்பி, கண்ணாடி, முககவசம் மற்றும் கையுறைகள் அணிந்திருந்தனர்.
துர்ஷெட் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை நடைபெற்றபோது, எஸ்.பி.ஐ.யின் டெல்லி அலுவலகத்துக்கு அலாரம் சென்றது.
இதையடுத்து உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, கொள்ளை கும்பலில் ஒரு பெண்ணும் இருந்தது தெரியவந்தது. மேலும், கொள்ளையர்கள் மகாராஷ்டிரா மாநில பதிவு எண் கொண்ட காரில் தப்பிச் சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து போலீசார் 2 தனித்தனி வழக்குகளை பதிவு செய்து கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகளை அமைத்துள்ளனர்.
சம்பவ இடங்களில் கிடைத்த தடயங்கள், கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் சுங்கச்சாவடிகளில் பதிவான காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
தெலுங்கானாவில் சமீப காலமாக ஏ.டி.எம்.களை காஸ்கட்டர் மூலம் உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மே மாதம் மகபூப்நகரில் இதேபோல் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.2.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA