Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 20 செப்டம்பர் (ஹி.ச.)
தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தலைமையிலான அரசை பி.ஆர்.எஸ். கட்சியின் முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான ஹரீஷ் ராவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
யாதாத்ரி புவனகிரி மாவட்டம் மோட்கூரில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பி.ஆர்.எஸ். கட்சியில் இணைந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு ஹரீஷ் ராவ் பேசினார்.
அப்போது, இயற்கை பேரிடரான எல் நினோவை விட ரேவந்த் ரெட்டியே தெலுங்கானா மாநிலத்துக்கு ஆபத்தானவர். மின்சாரம் உற்பத்தி செய்யும் வாய்ப்பு இருந்தும், நிலக்கரி தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களை கூறி அரசு மின்வெட்டு செய்து வருகிறது.
சந்திரசேகர் ராவ் ஆட்சியில் 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டது.
ஆனால் தற்போது 6 முதல் 7 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால் விவசாயப் பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன என்று குற்றம்சாட்டினார்.
மேலும், கிருஷ்ணா ஆற்றில் போதிய தண்ணீர் இருந்தபோதிலும் கல்வகுர்த்தி, நெட்டெம்பாடு, கொயில்சாகர் உள்ளிட்ட லிப்ட் பாசனத் திட்டங்களை அரசு இயக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் மாநிலத்தில் இல்லாத வறட்சி நிலையை அரசு உருவாக்கி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
ரைத்து பந்து நிதி
விவசாயிகளுக்கு கடந்த 3 பருவங்களுக்கான ‘ரைத்து பந்து’ நிதி வழங்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஹரீஷ் ராவ் கூறினார்.
கொரோனா போன்ற கடுமையான காலகட்டத்திலும் சந்திரசேகர் ராவ் அரசு விவசாயிகளுக்கான ‘ரைத்து பந்து’ திட்டத்தை நிறுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தலின்போது அளிக்கப்பட்ட பல்வேறு வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் ஹரீஷ் ராவ் வலியுறுத்தினார்.
தன்னை மிரட்டுவதன் மூலம் அமைதியாக்க முடியாது என்றும், எந்தவிதமான மிரட்டலுக்கும் அஞ்சப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சந்திரசேகர் ராவ் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவதால் விவசாயிகளுக்கு நீதி கிடைக்காது.
ஆட்சி செய்ய முடியாவிட்டால் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஹரீஷ் ராவ் கூறினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA