விடுமுறை தினத்தில் திருவண்ணாமலைக்கு படையெடுத்த பக்தர்கள் - அண்ணாமலையார் கோயிலில் கூட்டம் அலைமோதல்
திருவண்ணாமலை, 20 செப்டம்பர் (ஹி.ச.) பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் சுமார் ஒ
Thiru


திருவண்ணாமலை, 20 செப்டம்பர் (ஹி.ச.)

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

வார விடுமுறை நாட்களில் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவது வழக்கம்.

அவர்கள் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்த பின்னர், 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் வந்து வழிபாடு செய்கின்றனர்.

அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு நேற்று இரவு முதலே ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவியத் தொடங்கினர்.

இன்று அதிகாலை 5.30 மணியளவில் அண்ணாமலையார் திருக்கோயில் நடை திறக்கப்பட்டது.

தொடர்ந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து காலை 6 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

ராஜகோபுரம் வழியாக கோயிலுக்குள் செல்லும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

கூட்டம் அதிகமாக இருந்ததால், பக்தர்கள் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தனர்.

பின்னர் திருமஞ்சன கோபுர வாயில் வழியாக பக்தர்கள் வெளியேற்றப்பட்டனர்.

பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை கருத்தில் கொண்டு, கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

கோயிலுக்குள் வரும் பக்தர்கள் மற்றும் தரிசனத்துக்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நீர்மோர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

மேலும், வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் ராட்சத மின்விசிறிகளும் அமைக்கப்பட்டிருந்தன.

குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்யும் வகையில் அவர்களுக்கு தனி வரிசையும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இதனால் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

Hindusthan Samachar / P YUVARAJ