Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர், 20 செப்டம்பர் (ஹி.ச.)
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி முத்துப்பேட்டை பகுதியில் நடைபெற உள்ள விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டத்தில் 8 டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
முத்துப்பேட்டை, ஆலங்காடு, இடும்பாவனம் உள்ளிட்ட 8 முக்கிய பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடைகளுக்கு இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு முத்துப்பேட்டை பகுதியில் பிரம்மாண்டமான விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ளது. இந்த ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்க உள்ள நிலையில், பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலும், அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்கும் வகையிலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊர்வலம் செல்லும் பாதைகளில் மதுபானக் கடைகள் செயல்படுவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக காவல்துறை சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
விடுமுறை அறிவிக்கப்பட்ட நாளில் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
உத்தரவை மீறி மதுபானக் கடைகளை திறப்பது அல்லது மறைமுகமாக மதுபானங்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ