Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர், 20 செப்டம்பர் (ஹி.ச.)
திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு குருவை பருவத்தில் விவசாயிகளிடமிருந்து இதுவரை 10,500 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தெரிவித்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குருவை நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த பருவத்தில் சுமார் 1 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் எதிர்பார்க்கிறது.
இதற்காக மாவட்டம் முழுவதும் இதுவரை 105 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இதுவரை கொள்முதல் செய்யப்பட்ட 10,500 மெட்ரிக் டன் நெல்லுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் தொடர்ந்து தேங்கி வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்த மூட்டைகளை உடனடியாக லாரிகள் மூலம் அரசு கிடங்குகளுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் தேங்காமல் கிடங்குகளுக்கு தொடர்ந்து எடுத்துச் செல்லப்பட்டால் மட்டுமே, அறுவடை செய்யும் மற்ற விவசாயிகளிடமிருந்தும் தடையின்றி நெல் கொள்முதல் செய்ய முடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam