திமுகவின் தோல்வி என்பது கிரகணம் போன்றது, கொஞ்ச நேரம் பிடிக்கும், அதன்பிறகு தெளிவு பெறும் - கி.வீரமணி
திருச்சி, 20 செப்டம்பர் (ஹி.ச.) தந்தை பெரியாரின் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலையில் இருந்து பெரியார் நடை பயணத்தை திராவிட கழக தலைவர் கி.வீரமணி துவக்கி வைத்து பேரணியாக சென்றார். பெரியார் வ
Veeramani


திருச்சி, 20 செப்டம்பர் (ஹி.ச.)

தந்தை பெரியாரின் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலையில் இருந்து பெரியார் நடை பயணத்தை திராவிட கழக தலைவர் கி.வீரமணி துவக்கி வைத்து பேரணியாக சென்றார்.

பெரியார் வலியுறுத்திய சமூக நீதி மற்றும் சமத்துவத்தை வலியுறுத்தி இந்த பேரணி நடைபெற்றது

இந்த பேரணியில் சமூக நீதி குறித்தான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி முன்னுருக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் மாணவ மாணவியர் புத்தூரில் உள்ள பெரியார் மாளிகை வரை பேரணியாக சென்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,

ஆட்சியின் மீது வாக்களித்தவர்களிடமும், ஆட்சிக்கு ஆதரவளிக்கும் கூட்டணி கட்சிகளிடமும் மிகப்பெரிய அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த அதிருப்தி சுவரெழுத்து போல வெளிப்படையாகத் தெரிகிறது என்றும் அவர் கூறினார்.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் ஆளும் தரப்புடன் கூட்டணியில் இருந்து ஆதரவு அளித்தவர்களே தனித்து நின்று குறைகளை கூறும் நிலை ஏற்பட்டுள்ளதாக கி .வீரமணி குறிப்பிட்டார்.

இதன் மூலம் ஆளும் கட்சிகளையும் எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கிய புதிய கூட்டணி உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், கட்சிகளை உடைப்பது, எம்.எல்.ஏ.க்களை கட்சி மாறச் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் அரசியலமைப்புச் சட்டத்தின் 10-வது அட்டவணையின் கீழ் சட்டரீதியான கேள்விகளை எழுப்புவதாகவும் அவர் கூறினார்.

மேலும், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துவிட்டு குறுகிய காலத்திலேயே வேறு கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிடும் நிலை ஏற்பட்டால், அது பொது ஒழுக்கக்கேடு மட்டுமல்லாமல் அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான பிரச்சினையாகவும் அமையும் என கே.வீரமணி தெரிவித்தார்.

திமுகவை ரீல்ஸ் மூலம் தோற்கடித்ததாக அமைச்சர் ஆதவ் அர்ஜூன் கூறியதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு,

திமுகவின் தோல்வி என்பது கிரகணம் போன்றது. கிரகணம் கொஞ்ச நேரம் பிடிக்கும், அதன்பிறகு தெளிவு பெறும் என்றார்.

Hindusthan Samachar / ANANDHAN