தொடர்ந்து பதக்கங்களை குவிக்கும் இளவேனில் வாலறிவன் வெற்றி பயணம் தொடரட்டும்- டி.டி.வி தினகரன் பாராட்டு
சென்னை, 20 செப்டம்பர் (ஹி.ச) ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவரத
TTV Dhinakaran


Jb


சென்னை, 20 செப்டம்பர் (ஹி.ச)

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

அவரது வெற்றிக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் 45 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். வரும் அக்டோபர் 4-ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்நிலையில், மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் சிறப்பாக செயல்பட்டு 252.4 புள்ளிகளைப் பெற்றார். இதன்மூலம் அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். தங்கப் பதக்கத்தை 253 புள்ளிகளுடன் ஜப்பான் வீராங்கனை ஹினாதா டைச்சி வென்றார்.

இளவேனில் வாலறிவனுக்கு நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிடைத்துள்ள இரண்டாவது வெள்ளிப் பதக்கம் இதுவாகும். முன்னதாக, மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகள் பிரிவிலும் இளவேனில் வாலறிவன், சோனம் மாஸ்கர், விதர்ஷா வினோத் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தது.

இதன் மூலம் ஒரே நாளில் அணிகள் பிரிவு மற்றும் தனிநபர் பிரிவு என இரண்டு வெள்ளிப் பதக்கங்களை இளவேனில் வாலறிவன் வென்றுள்ளார். அவரது இந்த சிறப்பான செயல்பாடு தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ளது.

இளவேனில் வாலறிவனின் இந்த வெற்றியைப் பாராட்டி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளப் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு போட்டியிலும் புதிய இலக்குகளை நிர்ணயித்து, பதக்கங்களை வென்று தொடர்ந்து சாதனை படைத்து வரும் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இளவேனில் வாலறிவனின் இந்த வெற்றிப் பயணம் தொடர்ந்து மேன்மேலும் சிறக்கவும், சர்வதேச விளையாட்டு அரங்கில் பல்வேறு சாதனைகளை படைக்கவும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ