Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 20 செப்டம்பர் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டையில் நடிகர் அஜித்குமார் ரசிகர்கள் ஒன்றிணைந்து ‘தமிழக மக்கள் கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளனர்.
இதற்கான தொடக்க நிகழ்ச்சி மற்றும் கட்சியின் கொடி அறிமுக நிகழ்ச்சி எலவனாசூர்கோட்டையில் நடைபெற்றது.
மஞ்சள், வெள்ளை, சிவப்பு ஆகிய 3 வண்ணங்கள் கொண்ட கட்சிக் கொடியில் நடுவில் 2 சிறுத்தைகள் இடம்பெற்றுள்ளன.
நிகழ்ச்சியில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநிலத் தலைவராக ஆபித், மாநிலச் செயலாளராக ராம்குமார், மாநிலப் பொருளாளராக முகமது ஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் அஜித்குமார் ரசிகர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாநிலத் தலைவர் ஆபித் செய்தியாளர்களிடம் கூறுகையில், மனிதநேயத்துடன் கூடிய மதச்சார்பற்ற மக்கள் பணி, சாதி-சமயமற்ற சமூகநீதி, இயற்கை வளப் பாதுகாப்பு, பெண்கள் உரிமை மற்றும் சம வாய்ப்பு, தமிழர் நலம், தமிழ் மொழி வளர்ச்சி ஆகியவற்றை கட்சியின் முக்கிய கொள்கைகளாக கொண்டு தமிழக மக்கள் கழகம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், கட்சியின் கொடி அறிமுகம் மற்றும் தொடக்க ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
நடிகர் அஜித்குமார் இதுவரை அரசியலில் ஈடுபடாத நிலையில், அவரது ரசிகர்கள் ஒன்றிணைந்து புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam