Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை ஊர்வலம் இன்று மாலை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி திருவல்லிக்கேணி ரத்னா கபே சந்திப்பு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிற மத வழிபாட்டுத் தலங்கள் நிறைந்துள்ளதும், குறுகலான சாலைகளைக் கொண்டதுமான இந்தப் பகுதியின் உணர்திறன் கருதி, காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இரண்டு துணை ஆணையர்கள் தலைமையில், சுழற்சி முறையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் உதவி ஆணையர் ஒருவர், 3 காவல் ஆய்வாளர்கள், 10 உதவி ஆய்வாளர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட காவலர்கள் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இன்று மாலை இந்த வழித்தடத்தில் 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட உள்ளன. இதில் 15 அடி உயரம் கொண்ட பிரம்மாண்டமான விநாயகர் சிலைகளும் அடங்கும். ஊர்வலத்தை காணவும், சாமி தரிசனம் செய்யவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
அசம்பாவிதங்களைத் தடுக்கவும், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் திருவல்லிக்கேணி பகுதி முழுவதும் ட்ரோன்கள் மூலம் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Hindusthan Samachar / vidya.b