Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 செப்டம்பர் (H.S.)
சென்னை புறநகர் பகுதியான ஆவடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த ஸ்கூட்டர் ஒன்றை நிறுத்தி போலீசார் சோதனை செய்துள்ளனர்.
அந்த ஸ்கூட்டரை ஓட்டி வந்தவர் 21 வயதான ஹேம்நாத் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் ஸ்கூட்டரை முழுமையாக சோதனை செய்தனர்.
அப்போது ஸ்கூட்டரின் முன்பக்க டயருக்கு மேல் உள்ள மூடி பகுதிக்குள் சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தப்பிப்பதற்காக போலீசாரிடம் சிக்காத வகையில் மிக தந்திரமாக அவர் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்து ஹேம்நாத்தை கைது செய்தனர்.
அவர் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, யாருக்கு விநியோகம் செய்ய கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b