Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னையில் பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு மற்றும் திருவொற்றியூர் ஆகிய நான்கு முக்கிய கடற்கரைகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
மாநகரம் முழுவதும் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட மொத்தம் 2054 விநாயகர் சிலைகள் நேற்று ஒரே நாளில் கடலில் கரைக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு போலீசார் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சிலை கரைப்பின் போது எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்க கடற்கரை பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள், தற்காலிக வெளிச்ச வசதிகள் மற்றும் மீட்பு படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கடற்கரைகளை சுத்தம் செய்ய தனி பணியாளர்கள் மற்றும் கிரேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
நேற்று காலை முதலே பக்தர்கள் மேள தாளங்கள் முழங்க விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்து, கணபதி பப்பா மோரியா என்ற கோஷத்துடன் உற்சாகமாக கடலில் கரைத்தனர்.
பக்தர்களின் நீண்ட ஊர்வலங்கள் மற்றும் மேள தாள முழக்கங்களுடன் இந்த ஆண்டு விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வு சென்னையில் மிக அமைதியாகவும் விமரிசையாகவும் நடைபெற்று முடிந்தது.
Hindusthan Samachar / vidya.b