Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 செப்டம்பர் (ஹி.ச.)
இலங்கை துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகள் உடைக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டு வருவதாக வெளியாகியுள்ள செய்திகளுக்கு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்களின் படகுகள் அழிக்கப்படுவதை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அந்நாட்டில் உள்ள துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை, மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட பிறகும் திருப்பி வழங்காமல் உடைத்து அழிப்பது அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நடவடிக்கை என அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்வதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் இலங்கை அரசின் வழக்கமாக உள்ளது என்றும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டு தமிழகம் திரும்பிய பின்னரும் அவர்களின் படகுகள் விடுவிக்கப்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை 6 ஆண்டுகளில் தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 200-க்கும் மேற்பட்ட படகுகள் காங்கேசன்துறை, மயிலட்டி, மன்னார், வவுனியா உள்ளிட்ட துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த படகுகளை தற்போது தகர்த்து அழிக்கும் பணிகளில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளதாகவும் அன்புமணி தெரிவித்துள்ளார்.
கடந்த இரு நாட்களில் மட்டும் கணிசமான எண்ணிக்கையிலான படகுகள் உடைக்கப்பட்டதாகவும், தொடர்ந்து படகுகள் உடைக்கப்பட்டு வருவதாகவும் ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். எனினும், உடைக்கப்பட்ட படகுகளின் துல்லியமான எண்ணிக்கை தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு அழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்யப்படும்போது அவர்களின் படகுகளையும் விடுவிப்பதே நியாயமானது என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார். படகுகளை பறிமுதல் செய்து வைத்துக்கொள்வதும், குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை அவற்றை அழிப்பதும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை திட்டமிட்டு அழிக்கும் செயலாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
2021-ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு மே மாதம் வரை 174 படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்திருந்ததாகவும், அவற்றை உடைத்து கடலில் மூழ்கடிப்பதன் மூலம் செயற்கை பவளப்பாறைகளை உருவாக்கி மீன்வளத்தை பெருக்க முடியும் என கடந்த ஆண்டு மே மாதம் இலங்கை அரசுக்கு அந்நாட்டின் மீன்வளம் மற்றும் கடல்வளத்துறை பரிந்துரை செய்திருந்ததாகவும் அன்புமணி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 30-க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அழிக்கப்பட்டதாகவும், தற்போது மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால் எஞ்சியுள்ள படகுகளும் தகர்க்கப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்படுவதை தடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மீன்பிடி விசைப்படகிலும் குறைந்தது 10 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதாகவும், ஒவ்வொரு படகின் மூலம் 10 மீனவக் குடும்பங்கள் நேரடியாகவும், மீன்களை இறக்குதல், விற்பனை செய்தல், ஏற்றுமதி, படகு பராமரிப்பு, ஐஸ்கட்டி தயாரித்தல், எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட பணிகள் மூலம் 25 குடும்பங்கள் மறைமுகமாகவும் பயனடைவதாகவும் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய வாழ்வாதாரங்களை அழித்து தமிழக மீனவர்களை வங்கக்கடலில் இருந்து அகற்றுவதே இலங்கையின் திட்டம் என அவர் தெரிவித்துள்ளார். இதனை மத்திய, மாநில அரசுகள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, இலங்கை ஆட்சியாளர்களை மத்திய அரசு உடனடியாக தொடர்பு கொண்டு தமிழக மீனவர்களின் படகுகள் உடைத்து நொறுக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்றும், அந்த படகுகளை தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்புமணி இராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், இனிவரும் காலங்களில் மீனவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க இந்தியா–இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக மத்திய அரசுக்கு முதலமைச்சர் விஜய் அழுத்தம் தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ