ஆசிரியர்கள் மீது தாக்குதல் முயற்சி - முதல்வர் சந்திரபாபு நாயுடு கடும் எச்சரிக்கை
விஜயவாடா , 21 செப்டம்பர் (ஹி.ச.) விஜயவாடாவில் உள்ள ஆந்திர மாநில விளையாட்டு ஆணைய (ஷாப்) அலுவலகம் முன்பு விளையாட்டு ஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது
A


விஜயவாடா , 21 செப்டம்பர் (ஹி.ச.)

விஜயவாடாவில் உள்ள ஆந்திர மாநில விளையாட்டு ஆணைய (ஷாப்) அலுவலகம் முன்பு விளையாட்டு ஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

மெகா டி.எஸ்.சி. தேர்வில் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், தங்களது நியமனங்கள் வெளிப்படையாக நடைபெற்றதாகவும், தங்களிடம் உள்ள சான்றிதழ்கள் மற்றும் விளையாட்டுப் பதக்கங்கள் அனைத்தும் உண்மையானவை என்றும் தெரிவிப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் ஷாப் அலுவலகத்துக்கு சென்றனர். அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்கவும் அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

அப்போது, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் ஷாப் அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டி.எஸ்.சி. நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக கூறி அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒருவரையொருவர் எதிர்த்து கோஷங்கள் எழுப்பியதால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து போலீசார் விரைந்து வந்து இரு தரப்பினரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சந்திரபாபு ஆவேசம்

இந்த சம்பவத்துக்கு முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குப்பம் சென்றுள்ள அவர் கூறுகையில்,

ஆசிரியர்கள் மீது ரவுடிகளை ஏவி தாக்குதல் நடத்துவதை அரசு ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது.

மாநிலத்தில் ரவுடியிசம் மற்றும் அராஜகத்துக்கு இடமில்லை. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் வால்களை வெட்டுவோம். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்தார்.

மேலும், விளையாட்டு ஒதுக்கீட்டில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக எதிர்க்கட்சியினரிடம் ஆதாரங்கள் இருந்தால், அவற்றுடன் சட்டசபைக்கு வரலாம் என்றும் சந்திரபாபு சவால் விடுத்தார்.

பிரச்சினைகள் இருந்தால் சட்டரீதியாக நீதிமன்றத்தை நாடலாம் என்றும், அதைவிடுத்து ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்துக்கு ஆந்திர மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் மண்டிபள்ளி ராம்பிரசாத் ரெட்டியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA