மைசம்மா அம்மனுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பித்து துணை முதல்வர் பவன் கல்யாண் வழிபாடு
பித்தாபுரம் , 21 செப்டம்பர் (ஹி.ச.) ஆந்திர மாநில துணை முதல்-மந்திரியும், பித்தாபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பவன் கல்யாண் தனது தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பக்ருத்தீன் பாலெம் கிராமத்தில் உள்ள மைசம்மா குளக்கரையில் அமைந்துள்ள மைசம்மா அம்ம
A


பித்தாபுரம் , 21 செப்டம்பர் (ஹி.ச.)

ஆந்திர மாநில துணை முதல்-மந்திரியும், பித்தாபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பவன் கல்யாண் தனது தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

பக்ருத்தீன் பாலெம் கிராமத்தில் உள்ள மைசம்மா குளக்கரையில் அமைந்துள்ள மைசம்மா அம்மன் கோவிலுக்கு சென்ற அவர், அம்மனுக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்து சிறப்பு பூஜைகள் செய்தார்.

பின்னர், கிராமப்புற குளங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் ரூ.73 லட்சம் செலவில் அழகுபடுத்தப்பட்ட மைசம்மா குளத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். குளத்தை சுற்றி அமைக்கப்பட்ட நடைபாதை, திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் மற்றும் சிறுவர் பூங்காவையும் திறந்து வைத்தார்.

குளக்கரையை சுற்றிப் பார்வையிட்ட பவன் கல்யாண், அங்கு நடப்பட்டுள்ள மரங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், குளத்தின் நடுவில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் நந்தீஸ்வரர் சிலையுடன் கூடிய சிவன் சிலையையும் பார்வையிட்டார்.

அப்போது பவன் கல்யாண் கூறியதாவது:-

கிராமங்களில் உள்ள குளங்களை வெறும் நீராதாரங்களாக மட்டும் வைத்திருக்காமல், பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு மற்றும் ஆரோக்கியத்தை வழங்கும் சமூக மையங்களாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, பக்ருத்தீன் பாலெம் மைசம்மா குளம் மாநிலத்துக்கே முன்மாதிரியாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமரின் கிருஷி சிஞ்சாய் யோஜனா திட்ட நிதியின் மூலம் மாநிலம் முழுவதும் ரூ.50 கோடி செலவில் 105 குளங்களை அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பித்தாபுரம் தொகுதியில் மட்டும் ரூ.6 கோடி செலவில் 11 குளங்கள் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன.

இந்த பணிகள் அனைத்தையும் இந்த மாத இறுதிக்குள் நிறைவு செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, காக்கிநாடா மாவட்டத்தில் மேம்படுத்தப்பட்ட 14 குளங்களின் புகைப்படக் கண்காட்சியை பவன் கல்யாண் பார்வையிட்டார்.

பின்னர் கிராம செயலகம் மற்றும் குப்பையில் இருந்து செல்வம் உருவாக்கும் மையத்தையும் ஆய்வு செய்தார்.

அப்போது கிராம மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட அவர், அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.

குளங்கள் மற்றும் சுற்றுப்புற பகுதிகள் மேம்படுத்தப்படுவதன் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும் என்று பவன் கல்யாண் தெரிவித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA