இந்தியாவின் பெருமையை உயர்த்தியுள்ள இளவேனில் சாதனை தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது - நயினார் நாகேந்திரன்
சென்னை, 21 செப்டம்பர் (ஹி.ச.) ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில் நேற்று முன்தினம் (செப். 19) கோலாகலமாக தொடங்கிய 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அக்.4 வரை நடக்கவுள்ள இந்த தொடரில் 45 நாடுகளை சேர்ந்த மொத்தம் 11 ஆயிரம் வீரர்கள் மற்ற
Nainar Nagenthran Byte


சென்னை, 21 செப்டம்பர் (ஹி.ச.)

ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில் நேற்று முன்தினம் (செப். 19) கோலாகலமாக தொடங்கிய 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

அக்.4 வரை நடக்கவுள்ள இந்த தொடரில் 45 நாடுகளை சேர்ந்த மொத்தம் 11 ஆயிரம் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், மகளிருக்கான 10 மீ ஏர் ரைபிள் தனிநபர் தகுதி சுற்று மற்றும் அணிகள் பிரிவில் இறுதிச்சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றது.

விறுவிறுப்பாக நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் குழு பிரிவில் இந்தியாவை சேர்ந்த இளவேனில் வாளறிவன், சோனம் மஸ்கர், விதர்சா வினோத் ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தை வென்றனர். இந்த பதக்கம் நடப்பு ஆசிய தொடரில் இந்தியாவின் சிறப்பான தொடக்கமாக அமைந்துள்ளது.

மேலும், தனிநபர் பிரிவின் இறுதிப்போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த இளவேனில் வாலறிவன் (27), 252.4 புள்ளிகள் குவித்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார். மேலும், 253.0 புள்ளிகளுடன் ஜப்பானின் ஹினாட்டா தைச்சி முதல் இடத்தையும், தென்கொரியாவின் பான் ஹியோஜின் மூன்றாம் இடத்தையும் கைப்பற்றினர்.

இறுதிப்போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், இளவேனில் நூலிழையில் தங்கத்தை தவறவிட்டார். இதன் மூலம், இளவேனில் இரண்டு பதக்கங்களை வென்று பெருமை சேர்த்துள்ளார்.

முன்னதாக, மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிப் பிரிவில் இளவேனில் வாலறிவன், சோனம் மஸ்கர் மற்றும் விதர்சா வினோத் ஆகியோர் இரண்டாவது இடத்தைப் பிடித்து, இந்தியாவுக்கான பதக்க கணக்கைத் தொடங்கி வைத்தனர்.

இளவேனிலுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில்,

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியாவுக்காக இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள தமிழகத்தின் வீராங்கனை இளவேனில் வாலறிவன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தனிநபர் மற்றும் அணிப் பிரிவுகளில் சிறப்பான திறமையையும், விடாமுயற்சியையும் வெளிப்படுத்தி இந்தியாவின் பெருமையை உயர்த்தியுள்ள இளவேனில் அவர்களின் சாதனை தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.

இன்னும் பல சர்வதேச அரங்குகளில் வெற்றிகளைப் பெற்று, இந்தியாவின் வெற்றிப் பயணத்திற்கு தொடர்ந்து பெருமை சேர்க்க என் மனமார்ந்த வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN