பீகாரில் குளத்தில் மூழ்கி 6 சிறுவர்-சிறுமியர் பலி
பாட்னா , 21 செப்டம்பர் (ஹி.ச.) பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் குளிக்கச் சென்ற 6 சிறுவர்-சிறுமியர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகல்பூர் மாவட்டம் தரிடா பகியர் கிராமத்தைச் சேர்ந்த பூஜா குமாரி (13), ராகு
A


பாட்னா , 21 செப்டம்பர் (ஹி.ச.)

பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் குளிக்கச் சென்ற 6 சிறுவர்-சிறுமியர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகல்பூர் மாவட்டம் தரிடா பகியர் கிராமத்தைச் சேர்ந்த பூஜா குமாரி (13), ராகுல் குமார் (14), விகாஷ் குமார் (13), ஆயூஷ் குமார் (12), மீனாட்சி குமாரி (12), ஜோதி குமாரி (14) ஆகிய 6 பேரும் நேற்று காலை கிராமத்திற்கு அருகே உள்ள குளத்திற்கு குளிக்கச் சென்றனர்.

அப்போது அவர்கள் குளித்துக்கொண்டிருந்தபோது சிறுமி ஒருவர் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினார்.

இதைப்பார்த்த மற்ற சிறுவர்-சிறுமியர் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் ஒருவரை ஒருவர் காப்பாற்ற முயன்றபோது 3 சிறுமிகள், 3 சிறுவர்கள் என 6 பேரும் அடுத்தடுத்து நீரில் மூழ்கினர்.

இதற்கிடையே, குளிக்கச் சென்ற குழந்தைகள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவர்கள் குளத்திற்கு சென்று தேடியபோது, 6 பேரும் நீரில் சடலமாக கிடந்ததை கண்டு கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 6 பேரின் உடல்களையும் மீட்டனர். பின்னர் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே கிராமத்தைச் சேர்ந்த 6 சிறுவர்-சிறுமியர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA