பீகாரில் மாணவிகள் துன்புறுத்தப்பட்ட விவகாரம் - ராகுல் காந்தி கண்டனம்
பீகார், 21 செப்டம்பர் (ஹி.ச.) பீகார் மாநிலம் ஜமுய் பகுதியில் 10-ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகள் சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டதாக வெளியாகியுள்ள வீடியோ குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரி
ராகுல் காந்தி


பீகார், 21 செப்டம்பர் (ஹி.ச.)

பீகார் மாநிலம் ஜமுய் பகுதியில் 10-ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகள் சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டதாக வெளியாகியுள்ள வீடியோ குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

ஜமுயில் வெளியான வீடியோ மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். சாலையில் சென்ற இரண்டு மாணவிகளை சிலர் வழிமறித்து துன்புறுத்தியதாகவும், அவர்களை அவமானப்படுத்தி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில், இளம் மாணவி ஒருவர் கைகளை கூப்பி தங்களை விட்டுவிடுமாறு கெஞ்சும் நிலையில், சிலர் அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி இழுத்துச் செல்வதாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பெண்களின் உடல், நடமாட்டம் மற்றும் தனிப்பட்ட விருப்பங்களைக் கட்டுப்படுத்த ஆண்களுக்கு உரிமை இருப்பதாகக் கருதும் மனநிலையே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

இதுபோன்ற செயல்களை கலாசாரம் என்ற பெயரில் நியாயப்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

வீடியோவில் இடம்பெற்றுள்ள ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் செப்டம்பர் 19-ஆம் தேதி நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் இதுவரை கைது செய்யப்படாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாலை 7 மணியளவில் பொதுச்சாலையில் செல்லும் ஒரு மாணவிக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏன் ஏற்பட்டது என்பதற்கு பீகார் அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P