Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 செப்டம்பர் (ஹி.ச.)
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஆர். வீரமணி வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள சிறுமிகளுக்கு கல்வி உதவி வழங்குவதாகக் கூறி, அவர்களைச் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு வாடகை பங்களாவிற்கு வரவழைத்துப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்தச் சட்டவிரோதச் செயல்களுக்கு உடந்தையாக இருந்த சாந்தி மற்றும் மகேந்திர சிம்மன் ஆகியோருடன் சேர்த்து முதன்மைக் குற்றவாளியான வீரமணி கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தற்போது நீதிமன்ற அனுமதியுடன் புழல் சிறை வளாகத்தில் வீரமணியிடம் காவல்துறையினர் தீவிரக் காவல் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கியப் புள்ளிகள் எவராக இருந்தாலும் தப்பவிடக் கூடாது என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் தொடர்புடைய நபர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும் கூட, எவ்வித பாகுபாடும் இன்றி சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் ஆணையிட்டுள்ளார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் விஷயத்தில் தனது அரசு சமரசமற்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவருக்கு உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த வழக்கை விரைந்து விசாரித்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது மட்டுமின்றி, அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மற்றும் சாட்சியங்களை மறைக்க முயல்பவர்கள் மீதும் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b