கோதை ஆற்றில் மீன்பிடி வலையில் சிக்கிய முதலை - வனத்துறையினர் போராடி மீட்பு
கன்னியாகுமரி, 21 செப்டம்பர் (ஹி.ச.) கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு கடையாலுமூடு பாலம் அருகே கோதை ஆற்றில் வழக்கம்போல் மீனவர்கள் வலை வைத்திருந்தனர். இன்று காலை வலையை எடுக்கச் சென்றபோது, வலைக்குள் ஏதோ பெரிய உருவம் துடிப்பதைக் கண்டு அதிர்ச்சி அடை
Crocodile trapped in fishing net in Godai River


கன்னியாகுமரி, 21 செப்டம்பர் (ஹி.ச.)

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு கடையாலுமூடு பாலம் அருகே கோதை ஆற்றில் வழக்கம்போல் மீனவர்கள் வலை வைத்திருந்தனர். இன்று காலை வலையை எடுக்கச் சென்றபோது, வலைக்குள் ஏதோ பெரிய உருவம் துடிப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அருகில் சென்று பார்த்தபோது, அது ஒரு முதலை என்பது தெரியவந்தது. வலையில் சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் முதலை போராடிக் கொண்டிருந்தது.

இதுகுறித்து உடனடியாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் வன உயிரின மீட்புக் குழுவினர், முதலை சிக்கியிருந்த இடத்தை பார்வையிட்டனர்.

பொதுமக்களை பாதுகாப்பான தூரத்திற்கு அப்புறப்படுத்திவிட்டு, மிகுந்த எச்சரிக்கையுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, வலையில் சிக்கியிருந்த முதலையை பத்திரமாக மீட்டனர்.

மீட்கப்பட்ட முதலைக்கு காயங்கள் ஏதும் உள்ளதா என பரிசோதிக்கப்பட்டு, பின்னர் பாதுகாப்பான வனப்பகுதி அல்லது ஆழமான நீர்நிலையில் விடுவதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கோதை ஆற்றில் அவ்வப்போது முதலைகள் நடமாட்டம் இருப்பதாக கூறப்படும் நிலையில், ஆற்றில் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ செல்லும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b