குளம்போல் காட்சியளிக்கும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்
கடலூர், 21 செப்டம்பர் (ஹி.ச.) கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள மு.அகரம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மு.அகரம், பரூர், எடசித்தூர், கோணங்குப்பம், பள்ளிப்பட்டு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சே
நெல் கொள்முதல்


கடலூர், 21 செப்டம்பர் (ஹி.ச.)

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள மு.அகரம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு மு.அகரம், பரூர், எடசித்தூர், கோணங்குப்பம், பள்ளிப்பட்டு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல் மணிகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக விருத்தாசலம் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

நேற்று இரவு பெய்த கனமழையால் மு.அகரம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய வளாகத்திற்குள் மழைநீர் புகுந்து, குளம்போல் தேங்கி நிற்கிறது.

மேலும், விவசாயிகள் கொண்டு வரும் நெல் மணிகளை உரிய காலத்தில் கொள்முதல் செய்யாமல் மாதக்கணக்கில் தேக்கி வைப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மழையில் நனைந்த நெல் மணிகளை இதுவரை மூன்று முறை காய வைத்து வருவதாகவும், இதற்கான செலவைக்கூட சமாளிக்க முடியாமல் கடனில் தவித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் மணிகளை பாதுகாப்பாக வைக்க போதிய மேற்கூரை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும், தேங்கியுள்ள நெல் மணிகளை விரைந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam