Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் பணியாற்றி வரும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் முழுமையான விவரங்களை EMIS இணையதளத்தில் கட்டாயமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில்,
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும் பணிபுரியும் அலுவலக பணியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், ஆய்வக உதவியாளர்கள், நூலகர்கள், இரவு காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரின் விவரங்களும் விடுபடாமல் பதிவு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகள் குறித்த தரவுகளை ஒருங்கிணைக்கும் கல்வி மேலாண்மை தகவல் முறைமையான EMIS இணையதளத்தில் ஏற்கனவே ஆசிரியர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது பள்ளி நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அலுவலக பணியாளர்களின் தரவுகளையும் முழுமையாக சேகரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் பள்ளிகளில் உள்ள பணியாளர் பற்றாக்குறை, பணி நியமனம் மற்றும் பணியாளர்களுக்கான நலத்திட்டங்களை துல்லியமாக திட்டமிட முடியும் என கூறப்படுகிறது.
மேலும், ஏற்கனவே EMIS தளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்துள்ள பணியாளர்களின் தகவல்களில் ஏதேனும் பிழைகள் அல்லது திருத்தங்கள் இருப்பின், அவற்றை உடனடியாக சரிபார்த்து புதுப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த பணியை தலைமை ஆசிரியர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b