Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 21 செப்டம்பர் (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே கோதையாற்றில், கடந்த ஆறு ஆண்டுகளாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததாக கூறப்படும் சுமார் 300 கிலோ எடையுள்ள பிரமாண்ட முதலை வனத்துறையினர் விரித்த வலையில் சிக்கியது.
செங்குழிக்கரை, களியல், ஒருநடைக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இந்த முதலை அடிக்கடி தென்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து முதலையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் அடிப்படையில் கடந்த 7 மாதங்களாக வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், ஒருநடைக்கல் ஆற்றுப்பாலம் அருகே வனத்துறையினர் விரித்திருந்த வலையில் இன்று முதலை சிக்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த களியல் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த இருவர், வனத்துறை ஊழியர்களுடன் இணைந்து ஆற்றில் இறங்கி, கூடுதல் வலைகளைப் பயன்படுத்தி முதலையை பாதுகாப்பாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
தொடர்ந்து, முதலை பேச்சிப்பாறை சீரோ பாயிண்ட் பகுதியில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. வனத்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னர், முதலையை அடுத்தகட்டமாக எங்கு கொண்டு செல்வது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆறு ஆண்டுகளாக முதலையின் நடமாட்டத்தால் அச்சத்தில் இருந்ததாக கூறப்படும் அப்பகுதி மக்கள், முதலை சிக்கியதால் நிம்மதி அடைந்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam