Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 21 செப்டம்பர் (ஹி.ச.)
தேனி மாவட்டம் வருசநாடு வனப்பகுதிக்கு உட்பட்ட ஓயம்பாறை, வாலிப்பாறை உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. விடிய விடிய இடைவிடாது பெய்த கனமழையால் வனப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
கடந்த ஐந்து மாதங்களாக மழையின்றி வறண்டு, நீர்வரத்து இன்றி காய்ந்து கிடந்த மூல வைகை ஆற்றில் இந்த கனமழையைத் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வனப்பகுதியில் இருந்து வரும் மழை நீர் மலைகளில் இருந்து பெருக்கெடுத்து மூல வைகை ஆற்றில் பாய்ந்து வருகிறது.
இதன் காரணமாக தும்மகுண்டு தடுப்பணையில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது. தடுப்பணையை நிரப்பிய மழைநீர் மறுகால் பாய்ந்து செந்நிறத்தில் சீறிப் பாய்கிறது.
மண் அரிப்புடன் கலந்து வரும் இந்த வெள்ள நீரால் ஆறு முழுவதும் செந்நிறமாக காட்சியளிக்கிறது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு மூல வைகையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b