Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 21 செப்டம்பர் (ஹி.ச.)
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே கோவிலூரில் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் அதிகாலை சுமார் 1 மணியளவில் முகமூடி அணிந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல், வங்கியின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே நுழைந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் வங்கிக்குள் இருந்த பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடிக்க அவர்கள் முயன்றுள்ளனர்.
அப்போது வங்கியில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் ஒலித்துள்ளது. இதையடுத்து சத்தம் கேட்டு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதனால் வங்கியில் இருந்த பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வங்கியில் பதிவாகியுள்ள தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், வங்கியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam