Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 21 செப்டம்பர் (ஹி.ச.)
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை சில நாள்களிலேயே ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
இதனையடுத்து மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, தற்போது இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறும் நிலையில், வாக்கு எண்ணிக்கையானது அக்டோபர் 9ஆம் தேதி நடைபெறுகிறது.
வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைந்துள்ள நிலையில் மதுராந்தகம் தொகுதியில் 27 பேர் போட்டியிடுவது இறுதியாகியுள்ளது.
இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் வேட்பாளர்களுக்கான தேர்தல் சின்னங்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் களம் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் மதுராந்தகம் தொகுதியில் வரும் செப்டம்பர் 25ஆம் தேதி முதலமைச்சர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.
அச்சரப்பாக்கத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் அவர் பேசவுள்ள நிலையில், அந்த இடத்தை தயார் செய்யும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.
அச்சரப்பாக்கத்தில் வஜ்ரகிரி மலையடிவாரத்தில் மயிலம் பொம்ம மடம் ஆதீனத்துக்குச் சொந்தமான சுமார் 10 ஏக்கர் பரப்பளவிலான இடம் பொதுக்கூட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இடத்தில் முதலமைச்சர் விஜய் உரையாற்றும் வகையில் மேடை அமைப்பதற்கான கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதேபோல் பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அமரும் பகுதியை அமைத்தல், கூட்டத்துக்கு வருபவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான இடத்தை தயார் செய்தல் உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த கூட்டத்தில் சுமார் 7,000 பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், அந்த இடத்தை சுற்றிலும் தேவையான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
பொதுமக்கள் எந்த வழியாக கூட்டத்துக்கு வர வேண்டும்? எந்தப் பகுதியில் அமர வேண்டும்? வாகனங்கள் எங்கு நிறுத்தப்பட வேண்டும்? என்பதற்கான திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. பொதுக்கூட்டம் நடைபெறும் இடம், மேடை பகுதி, பார்வையாளர்கள் திரளும் பகுதிகள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
செப்டம்பர் 25ஆம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கான பணிகளை விரைந்து முடிக்க தவெக நிர்வாகிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்தகட்டமாக அக்டோபர் 2ஆம் தேதி, மதுராந்தகம் தொகுதியில் ரோட்ஷோ சென்று பிரச்சார வாகனத்தில் இருந்தபடி முதலமைச்சர் வாக்கு சேகரிக்க உள்ளதாக கட்சி அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN