Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 21 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பில் முறையாகச் சேர்ந்து, கட்டணம் செலுத்தி, கடந்த இரண்டு மாதங்களாக வகுப்புகளில் பங்கேற்று வந்த மாணவர் நவீனின் சேர்க்கை திடீரென ரத்து செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவலுக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம். எச். ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பைச் சேர்ந்த தலித் மாணவரான தீரன் என்கிற நவீனின் சேர்க்கை ரத்து செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
மாணவர் நவீனின் கடந்தகால அரசியல் செயல்பாடுகளை மனதில் கொண்டே அவரது சேர்க்கை ரத்து செய்யப்பட்டதாக சக மாணவர்கள் குற்றம்சாட்டுவதாகவும், அது உண்மையெனில், மாணவரின் அரசியல் கருத்து அல்லது செயல்பாடுகளின் அடிப்படையில் அவரது கல்வி உரிமை பறிக்கப்பட்டிருப்பது கவலைக்குரிய நடவடிக்கை என்றும் ஜவாஹிருல்லா குறிப்பிட்டுள்ளார்.
முறையாகக் கட்டணம் செலுத்தி, இரண்டு மாதங்களாக வகுப்புகளில் பங்கேற்று வந்த மாணவரின் சேர்க்கையை ரத்து செய்வதற்கு முன்பு, அவருக்கு எதிராக ஏதேனும் குற்றச்சாட்டு இருந்தால் அது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும், தனது தரப்பு விளக்கத்தை அளிக்க மாணவருக்கு உரிய வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எந்தவித நடைமுறை விசாரணையும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அது நியாயமான நிர்வாக நடைமுறைகளுக்கு எதிரானதாகும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், மாணவர் நவீன் விடுதியில் இடம் கோரி பல்கலைக்கழகப் பதிவாளரிடம் எழுத்துப்பூர்வமாகக் கோரிக்கை வைத்ததே அவரது சேர்க்கை ரத்து செய்யப்பட்டதற்கான அடிப்படையாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இது உண்மையெனில், விடுதி வசதி கோரியதற்காக மாணவரின் கல்வி எதிர்காலத்தைப் பாதிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது அநீதியானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்து சிந்திப்பதும், ஜனநாயக ரீதியில் தங்களது கருத்துகளை வெளிப்படுத்துவதும் அவர்களின் குடிமை உணர்வின் ஒரு பகுதி என்றும், மாணவர் அரசியல் செயல்பாட்டை ஒடுக்குவதற்காக கல்வி நிறுவனங்களின் அதிகாரம் பயன்படுத்தப்படக் கூடாது என்றும் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
எனவே, மாணவர் நவீனின் சேர்க்கை ரத்து செய்யப்பட்டதற்கான காரணத்தை சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் வெளிப்படையாக விளக்க வேண்டும் என்றும், இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி மாணவருக்கு நியாயமான வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மாணவரின் கல்வி பாதிக்கப்படாத வகையில் அவரது சேர்க்கையை உடனடியாக மீண்டும் வழங்கி, முதுகலைப் படிப்பைத் தொடர்ந்து மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்தியுள்ளார்.
ஒரு மாணவரின் கல்வி உரிமை எந்தவொரு அரசியல் கருத்து வேறுபாட்டிற்கும் பலியாகிவிடக் கூடாது என்றும், சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு நியாயமான தீர்வை வழங்க வேண்டும் என்றும் ஜவாஹிருல்லா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P